Protected by Copyscape Website Copyright Protection

Thursday, September 24, 2015

ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்

2008ம் ஆண்டு... நான் “ஸ்ரீ மஹாசாஸ்தா விஜயம்” புத்தகத்தை எழுதி அதை வெளியிடுவதற்காக பல ஆன்மீக பெரியோர்களிடம் முன்னுரை கேட்டிருந்தேன்...
ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் சிறிது கால இடைவெளிக்கு பிறகு ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனைக்கட்டி ஆசிரமத்தில் அவரிடம் என் புத்தகத்தைக் காட்டி,

 “ஸ்வாமிஜி இதற்கு Foreword தர வேண்டும்” என்றேன்.

”இவ்ளோ பெரிய புக்கா? நீங்கள் எழுதி இருக்கிறீர்களா? உங்களுக்கு எவ்வளவு வயசாச்சு?” என்றார்.
“இருபத்தி ஐந்து” என்றேன்.

”இவ்ளோ எழுதி இருக்கேளே... Foreword உடனே தரட்டுமா ? இல்லை புக்கை ஃஃபுல்லா படிச்சுட்டு தரட்டுமா?”
“தாராளமா படிச்சுட்டே குடுங்கோ”

இந்த சம்பவம் நடந்து ஒரு 10-12 நாட்களுக்கு பிறகு ஒருநாள் அதிகாலை 5 மணிக்கு தொலைப்பேசியில் ஒரு அழைப்பு.

இந்த நேரத்தில் யார் என்ற குழப்பத்துடன் போனை எடுத்தேன் “ஸ்வாமிஜி உங்களுடன் பேசுகிறார்..” என்று ஒருவர் சொன்னார்.
“அற்புதமான படைப்பு... அதற்கான முன்னுரையும் எழுதி விட்டேன். இன்று காலை 8 மணி ப்ளைட்டில் புறப்பட்டு செல்கிறேன். அங்கிருந்து அமெரிக்கா செல்வதால் திரும்ப 2-3 மாதம் ஆகி விடும். நான் கையிலேயே வைத்திருக்கிறேன்.. நீங்கள் ஏர்போர்ட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ள முடியுமா?” என்றார்.

ஏர்போர்ட் சென்றால் கையிலேயே ஒரு ஃபோல்டர் ஃபைல் வைத்துக் கொண்டிருந்தார்....
“இந்த சின்ன வயசுல இவ்ளோ கஷ்டபட்டு ரிஸர்ச் பண்ணி எழுதி இருக்கேள்.... அதுனால தான் நானே கைப்பட குடுக்கணும்னு வர சொன்னேன்.... சீக்ரமே மத்த லாங்குவேஜ்லயும் ரிலீஸ் பண்ணுங்கோ” என்று சொல்லி வாழ்த்தி ஆசீர்வதித்துக் கொடுத்தார்.

ஆசிரமத்திலிருந்து தபாலில் அனுப்பி இருந்தாலும் எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும்.. இருந்தாலும் தானே போனில் பேசி தன் கைப்படக் கொடுத்த அந்த பண்பும் எளிமையும் தான் அவரை மற்றவர்களிடமிருது உயர்த்திக் காட்டியது.
வேதாந்தக் கருத்துக்களை மிகச்சாதாரணமாக பாமர மக்களுக்கு கொண்டு செல்லும் வல்லமை அவருக்கு இருந்தது.

தன் இறுதி நொடி வரை நினைவினை இழக்காமல் ஆன்ம நிட்டையில் லயித்திருக்கும் தன்மையை “யோகினாமபி துர்லபம்” என்கிறது சாஸ்திரம். உயர் ஞானத்தின் Personification ஆக விளங்கிய அவர், யோகிகளுக்கும் அரிதாக கிடைக்கும் அத்தகைய உயர் நிலையை அடைந்து ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் அந்த பரம்பொருளில் லயமடைந்து விட்டார்.
ஸ்வாமி சரணம்
அரவிந்த் ஸுப்ரமண்யம்