Protected by Copyscape Website Copyright Protection

Wednesday, November 9, 2016

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிப்பது

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிப்பது குறித்து தான். நான் இது தொடர்பாக எழுதும் ஒரே பதிவு. இறுதியான முடிவை ஐயப்பனே எடுப்பார் என்பதால் அமையாகவே இருந்தேன். நண்பர்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பதிவு.

V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

ரொம்பவும் டெக்னிக்கலாகவும், சாஸ்த்ர ரீதியாகவும், லௌகீக ரீதியாகவும் இதில் உள்ள விஷ்யங்களை பலரும் கூறி விட்டார்கள். நான் என் மனதுக்கு பட்ட சில விஷயங்களை பட்டியல் இடுகிறேன்.

ஏற்கனவே ஒரு நூலில் ஐயப்பன் குறித்த கேள்வி பதிலுக்கு இது குறித்து விளக்கம் அளித்துள்ளேன். எனினும் இன்னும் சற்று விரிவாகக் காண்போம்.

1. சபரிமலைக்கு பெண்கள் எல்லோரும் செல்லலாம் என்று தீர்ப்பு ஏதும் இன்னும் வரவில்லை. பலரும் கேரள அரசு ஆணை பிறப்பித்து விட்டதாகவும், தீர்ப்பு வந்து விட்டதாகவும் கருதி பல பதிவுகளை இடுகிறார்கள். இது சரியல்ல !

கேரள அரசு மாறி இருப்பதால் அவர்கள் நிலைப்பாடும் மாறி இருக்கிறது. இதற்கு முந்தைய அரசு - ஆலயத்தில் ஆசார நியமங்களில் தலையிடுவது சரியாகாது என்ற நிலைப்பாட்டில் இருந்தது, இப்போது கடவுள் நம்பிக்கையற்ற அரசு வந்திருப்பதால் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிப்பதில் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று கோர்ட்டில் சொல்லி இருக்கிறது. அவ்வளவு தான்.

அடுத்த விசாரணை 2017 பிப்ரவரி க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இறுதித் தீர்ப்பு வருவதற்கு ஒரு மாமாங்கம் கூட ஆகலாம்.

2. சபரிமலையில் பெண்களே அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் சரியல்ல. 10 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளும் 50 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களும் அனுமதிக்கப்படவே செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தடையும் இல்லை.

3. ஐயப்பன் ப்ரம்மசர்யத்தில் இருப்பதால் பெண்களைக் காணமாட்டார் - என்பது சரியான வாதம் அல்ல !

ஐயப்பன் யாரையுமே தன்னை தரிசிக்கத்தடை விதிக்கவில்லை.  நம் அனைவரையும் படைத்தது அவனே.  ஐயப்பனுக்கு ஜீவன்களிடம் எந்த விதமான பாகுபாடும் கிடையாது. ஆனால் சபரிமலைக்கு வர சில நியமங்கள் உண்டு.

இதில் முக்கியமான விஷயம் - சபரிமலை யாத்திரையின் அடிப்படை 41 நாட்கள் விரதம்.  அதுவும் பண்டைய காலத்தில் 56-60 நாட்கள் விரதம் நிச்சயம் இருப்பார்கள்.

பெண்களால் குறிப்பிட்ட வயது அடையும் வரை இந்த விரதத்தை முறையாக கடைப்பிடிப்பது என்பது ப்ராக்டிகலாக இயலாத காரியம்.

மேலும் நமது சாஸ்திரங்கள் நமக்காக நிறைய காருண்யங்களை வகுத்திருக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு; அவர்களின் நன்மைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நமது வேதங்களில் உள்ள தர்மசாஸ்திரங்கள் பெண்களுக்கென்று சிறப்பான இடத்தை அளித்திருக்கின்றன.  தற்கால நவீன  சிந்தனையாளர்களுக்கு இது புரியாது.

இன்றைய நவீன காலத்தில் நமது சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள காருண்யங்களை நாம் சரிவர புரிந்து கொள்ளாமல் அவற்றை விட்டு விலகிவிட்டோம்.  நமது சாஸ்திரங்களின்படி ஆணைவிட பெண் எந்தவிதத்திலும் குறைந்தவளில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.  ஆண் தனது குருவிற்கு சேவை செய்கிறான்.  பெண் தனது கணவனுக்கு பணிவிடை செய்கிறாள்.  ஆண்களும், பெண்களுக்கு சில பணிவிடைகளை செய்தாக வேண்டும்.  நமது வேதங்களின்படி ஆண் எந்த விதத்திலும் பெண்ணைவிட உயர்ந்தவன் இல்லை. ஆண் தனது கடமைகளை வேறுவிதமாக செய்கிறான். அவ்வளவுதான்.

பெண்களுக்கு வீட்டு கடமைகள் அதிகமாக இருப்பதால் அவர்களால் யாத்திரைக்கான விரத நடைமுறைகளை கடைபிடிப்பது மேலும் சுமையாக இருக்கும்.  ஆண்கள் செய்யும் நல்ல கர்மங்களின் பலன்களில் 50% பெண்களைச் சேரும்.  மாறாக ஆண்கள் செய்யும் தீயகாரியங்களால் விளையும் பாபங்கள் அனைத்தும் ஆண்களை மட்டுமே சேரும்.

இதற்கு நேர்மாறாக பெண்கள் செய்யும் நல்ல கர்மங்களின் பலன்கள் அனைத்தும் பெண்களுக்கு மட்டுமே சேரும். அவர்கள் செய்யும் தீயகாரியங்களால் விளையும் பாபங்களில் 50% ஆண்களுக்கும் சேரும்.  என்ன வினோதம்!
விரத காலத்தின் போது நம்மில் பலர் நமது தாயாரையும், சகோதரிகளையும், மனைவியையும் எந்த அளவிற்கு சிரமத்துக்கு உள்ளாக்குகிறோம்? நாம் மலைக்கு மாலை போட்டுக் கொண்டால் அவர்களும் மாலை போடாமலே விரத முறைகளை அனுஷ்டிக்கிறார்கள்.

அதனால் நாம் சிரமப்பட்டு யாத்திரை  சென்று பெறும் புண்ணியத்தில் 50% வீட்டில் இருந்து நமக்கு சேவை செய்வதன் மூலம் பெண்கள் அடைகின்றனர். ஆக மொத்தத்தில், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான ஐயனை பொறுத்தவரை அவனை தரிசிக்க பெண்கள்  வரத்தடையில்லை. மாறாக அவர்கள் சிரமப்பட்டு வரவேண்டிய அவசியமேயில்லை என்பதுதான் உண்மை.

Should Not Come-க்கும் Need Not Come-க்கும் உள்ள மாறுபாட்டை புரிந்து கொள்வோம்.

4. மேலே உள்ள விதிமுறையைப் படித்தவுடன் எழும் கேள்வி - அப்படியானால் இப்போது செல்லும் ஆண்கள் எல்லோரும் 41 நாள் விரதம் இருந்துதான் செல்கிறார்களா? என்பது.

பண்டைய காலத்தில் விரதம் இல்லாமல் சபரிமலையை நினைக்கக் கூட மாட்டார்கள். ஸபரிமலையில் தீ விபத்து உண்டான போது உதவிக்கு சென்ற மக்களும் போலீசாரும் - நாம் விரதம் இல்லாமல் இருக்கிறோமே? சபரிமலையை ஏறினால் நமக்கும் ஏதும் தீமை வந்து விடுமோ என்று பயந்து தயங்கி - மலை ஏறாமல் நின்றதைக் கண்டதாக என்னுடைய தாத்தா (குருஸ்வாமி கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயர்) கூறி இருக்கிறார்.

முற்காலத்தில் இருந்த கடுமையான நியமங்கள் இப்போது யாரும் கடைபிடிப்பது இல்லை. ஐயப்பன் என்றால் ஒரு பயம்-பக்தி இருந்தது. இபோது பக்தி மட்டும் தான் இருக்கிறது. சிலரிடம் பயம் குறைந்த மாதிரி தெரிகிறது. முறையாக விரதம் அனுஷ்டித்த பின்னரே பெருவழிப்பயணமும், பதினெட்டாம்படியில் ஏறவும் செய்தார்கள். இப்போது ஆயிரம் காரணம் சொல்லி விரதம் இருக்க முடியாத நிலையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த விஷயம் சரியானாலே எல்லாம் சரியாகி விடும். நாம் நம் விரதத்தை ஒழுங்காக இருப்போம் - மற்றதை ஐயப்பனிடம் விட்டு விடுவோம்.

5. எல்லாவற்றுக்கும் மேலாக சபரிமலையில் ஓர் இலை அசைய வேண்டுமானாலும் கூட அது ஐயப்பனின் அனுமதி இன்றி நடக்காது. பலரது வாழ்விலும் ஐயப்பன் நிகழ்த்திக் காட்டி உணர்த்திய சத்தியம் இது ! எனவே நமது சுப்ரீம் கோர்ட் - அந்த் ஐயப்பன் தான். அவன் என்ன முடிவு செய்கிறானோ அதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அவன் பேசும் தெய்வம் ! நிச்சயம் அவனே இதற்கு ஒரு முடிவு கொடுப்பான்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !

V. அரவிந்த் ஸுப்ரமண்யம்